"மைனா' படத்தின் மூலம் பிரபலமான அமலா பாலுக்கு, அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே, அதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆனால் சமீப காலமாக வெளியான படங்களில் அமலாபாலின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனால் சுதாரித்துக்கொண்ட அமலாபால், கதைத் தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம்.

Advertisment

cc

இந்நிலையில் பாலிவுட் பட வாய்ப்பு ஒன்று அமலாபால் வீட்டின் கதவைத் தட்ட, தோல்வியால் துவண்டிருக்கும் அவருக்கு இது இந்தியில் முதல் படம் என்பதால், உடனே க்ரீன் சிக்னல் காட்டியுள்ளாராம். நாங்களும் உங்களைப் போலதான் ஆர்வத்துடன் அது என்ன படம் என்று அவர் களுக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம். அதற்கு அவர்கள், கைதி படத்தின் ரீமேக்காம் எனப் பதிலளிக்க, ஆச்சரியத்தில், கைதியா? அதில்தான் ஹீரோயினே கிடையாதே? அப்புறம் எப்படி அதில் நடிக்கிறார் என்று பதில் கேள்வியை முன்வைத்தோம். அதற்கு, "கைதி படத்தை அஜய் தேவ்கன் "போலா' என்ற பெயரில் இயக்கி நடித்து வருகிறார். பொதுவாக பிறமொழிப் படங்களை இந்தியில் ரீமேக் செய்யும்போது கதைக்கு தேவை யில்லை என்றாலும், அவர்களுக்கு ஏற்றவாறு கதையில் மாற்றம் செய்து ஹீரோயின்களை கொண்டு வருவது வழக்கம்தான். அதே ஃபார்முலாவைப் பயன்படுத்தி, நரேன் கதாபாத்திரத்தை பெண்ணாக மாற்றி தபுவை நடிக்க வைக்கும் அஜய் தேவ்கன், கதையில் சிறு மாற்றத்தைச் செய்து அமலாபாலையும் உள்ள கொண்டுவந்திருக்கிறார்'' என விளக்கமாகக் கூறுகின்றனர். இதனிடையே சமீபகாலமாக தமிழில் வெளியான ஹிட் படங்கள் இந்தி மொழிக்கேற்ப ரீமேக் செய்யப்பட்டு தோல்வியை சந்தித்த நிலையில், இந்தப் படத்தை என்ன செய்யப் போகிறார்களோ என்ற கவலையில் இருக்கிறார்களாம் "கைதி'யின் ரசிகர்கள்.

மம்முட்டியுடன் மக்கள் செல்வன்!

டோலிவுட்டிலிருந்து பாலிவுட் வரை ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல் எனத் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் சிக்ஸர் அடிக்கும் விஜய் சேதுபதி, அடுத்ததாக மலையாள சூப்பர் ஸ்டாரான மம்முட்டியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இந்த படத்தை "காக்கா முட்டை', "கடைசி விவசாயி' படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கவுள்ளாராம். இதற்கான முதற்கட்டப் பணிகளையும் மணிகண்டன் தொடங்கியிருக்கிறாராம்.

விஜய் சேதுபதி தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் "விடுதலை' படத்திலும், அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கானுடன் "ஜவான்' படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களின் பணிகளை முடித்த பிறகு மணிகண்டன் இயக்கும் மம்முட்டி படத்தில் இணைவார் எனக் கூறப்படுகிறது.

விஜய் Vs விஷால்!

"வாரிசு' படத்தில் நடித்துள்ள விஜய் அடுத்தாக, லோகேஷ் கனகராஜ் இயக்கும் "தளபதி 67' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளில் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருகிறாராம் லோகேஷ். அதன்படி, கதாநாயகியாக த்ரிஷாவையும் வில்லன்களில் ஒருவராக இந்தி நடிகர் சஞ்சய் தத்தையும் புக் செய்துள்ளாராம்.

cc

Advertisment

இப்படத்தின் கதைப்படி இரண்டு மூன்று வில்லன்கள் உள்ளார்களாம். அதற்காக அர்ஜுன், கவுதம் மேனன், பிரித்திவிராஜ் உள்ளிட்ட பிரபலங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், அந்த வரிசையில் தற்போது விஷாலிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான சந்திப்பில் லோகேஷ், விஷாலிடமே கதை கூற, அதைக் கேட்ட விஷால் இன்னும் எந்த பதிலும் கூறவில்லையாம். ஆனால் விஜய்யின் மீது உள்ள நட்பின் காரணமாக விஷாலும் இதற்கு ஓகே சொல்லிவிடுவார் என்று திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஷால் ஓகே சொல்லும் பட்சத்தில் முதல்முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பாலிவுட்!

"கோல்மால்', "வரலாறு முக்கியம்' உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் ஜீவா, மீண்டும் ஒரு புதிய பாலிவுட் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். ஏற்கனவே இந்தியா முதன் முதலாக கிரிக்கெட்டில் உலகக் கோப்பை வென்றதை மையமாக வைத்து வெளியான "83' படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான ஜீவா, அந்த படத்தில் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில், அப்படியே அவரைப் போன்று நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், பாலிவுட் படம் ஒன்றில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஜீவா ஒப்பந்தமாகியுள்ளாராம். இது அவரது கேரியரில் முக்கிய படமாக இருக்கும் என ஜீவா நம்புகிறார். பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஒருவர் இப் படத்தை இயக்க, அடுத்த மாதத் தொடக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியிலோ அல்லது அதற்கு முன்போ வெளியாகலாம் எனத் தெரிகிறது.

- கவிதாசன் ஜெ